இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0021 குறள் திறன்-0022 குறள் திறன்-0023 குறள் திறன்-0024 குறள் திறன்-0025
குறள் திறன்-0026 குறள் திறன்-0027 குறள் திறன்-0028 குறள் திறன்-0029 குறள் திறன்-0030

சமுதாய உயர்வையே குறிக்கோளாகக் கொண்டு, அதற்காகவே தம்மை அர்ப்பணித்து, தொண்டு செய்து வாழும் பெரியார்களை, ஒழுக்கத்து நீத்தார், துறந்தார், இருமை வகை தெரிந்து அறம் பூண்டார், ஐந்தின் வகை தெரிவான், ஐந்தும் காப்பான், ஐந்து அவித்தான், அந்தணர், நிறைமொழி மாந்தர், பெரியர், குணம் என்னும் குன்றேறி நின்றார் என்று வள்ளுவம் வகைப்படுத்துகிறது. உரையாசிரியர்களோ இத்துணைச் சீரிய சமுதாய வழிகாட்டிகளையும், 'நீத்தார்' எனப் பொதுவாகச் சாற்றி, சமூக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட துறவிகளாக்கி ஒதுக்கி விட்டனர்.
- கு ச ஆனந்தன்

தந்நலம் நீத்தார் பெருமை கூறும் அதிகாரம். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ள மேன்மக்கள் பற்றிப் பேசுவது. தனிப்பட்ட விடுதலை நோக்கித் துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பதல்ல இத்தொகுப்பு; உடற்பற்று விட்டு உடல்வாழ்வை பொதுநலத்துக்காகத் தந்து தொண்டு செய்பவர்களைச் சிறப்பிப்பது. மனித வாழ்வின் உச்சநிலை அடைந்தவர்களைப் போற்றுகிறது. இத்தகைய உயர்ந்தோரின் செயல்பாடுகள்தாம் சமுதாய ஆற்றலை உருவாக்குகின்றன. இதனாலேயே கடவுள் வணக்கம் சொல்லி, இறைவனின் அடையாளம் காட்டும் இயற்கையின் சிறப்பு கூறியபின் நிறைமனிதரின் இன்றியமையாமை கருதி பாயிரத்தின் மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமை பாடுகிறார் வள்ளுவர். சிறப்பு வாய்ந்தவரில் மிக மேன்மையாளராகக் கருதப்படும் வெவ்வேறு வகைப்பட்ட மாந்தர்களை நீத்தார் என்ற பொதுப்பெயரில் அழைத்து அக்குழாத்து மாந்தர் சிலரை வகைப்படுத்தி இந்த அதிகாரத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் வள்ளுவர்.

நீத்தார்:

முதற்குறளில் உள்ள 'ஒழுக்கத்து நீத்தார்' என்ற சொற்றொடர் அதிகாரத்துத் தலைப்பிற்கு வரையறை காண்கின்றது. ஒழுக்கம் என்பது ஓர் ஒழுங்கைக் குறிக்கும் சொல். நீத்தார் என்பது துறந்தவர்கள் என்ற நேரடிப் பொருள் தரும். 'ஒழுக்கத்து நீத்தார்' என்றது முதல் வாசிப்பில் தெளிவு கொடுக்கவில்லை. மணக்குடவர் 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தார்' என்று இத்தொடரை விளக்குவார். காலிங்கர் 'தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே கருதி விட்டு நீங்கினார்' அதாவது இல்லற ஒழுக்கத்திலிருந்து துறவறம் சென்றவர்கள் என்பது இவர் உரையின் கருத்து. ஒழுக்கத்து நீத்தார் என்பதற்கு தன்னலந்துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியார் எனப் பொருள் கொள்ளலாம். மக்கள் நன்மைக்காக உயிர் நீத்தவர்களைக் குறிப்பதாகவும் ஒரு விளக்கம் உள்ளது. தியாகிகள் என்ற பொருளும் நீத்தாருக்குப் பொருந்த வரும்.

இச்சொல்லின் நேர்பொருளை வைத்து ‘நீத்தார்’ என்பது முற்றும் துறந்த முனிவர்களைச் சொல்வது என்று பலரும் கருத்துத் தெரிவிப்பர். ஆனால் நூலுள் துறவுக்கென்று தனியதிகாரம் ஒதுக்கி விளக்கப்பட்டுள்ளதால் பாயிரத்தில் தீரத் துறந்தார் பெருமையைப் பற்றி எழுதத் தேவை இல்லை. எனவே இங்கு சொல்லப்பட்டுள்ள நீத்தார் வேறு. இது துறவறம் மேற்கொண்டவர்களைப் பற்றிக் கூறும் ஒரு அதிகாரம் அல்ல. 'சங்ககாலத்தில் நன்னெறி சார்ந்த உயர்குடி மக்களைக் காண்கிறோம். ஆனால் எந்தக் குழுவும் துறவு பூண்டதாக இல்லை' என்ற தெ பொ மீ யின் குறிப்பு இங்கு நோக்கத்தக்கது. வள்ளுவம் காட்டும் நீத்தார், பொதுநலம் நாடித் தவம் செய்பவர்கள். இவர்களது தவம் உடலால் உயிரால் உணர்வால் செய்யக்கூடியது. இவர்கள் தனக்கு என்றின்றி பிறர்க்காக, உயிர்களின் மேம்பாட்டுக்காக பணிபுரிபவர்கள்.
உண்டால் அம்ம, இவ் உலகம் -
......................... தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
(புறநானூறு 182)
(பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்...தமக்கென்றுமுயலாத வலிய முயற்சியையுடைய பிறர்பொருட்டென முயல்வார் உண்டாதலான்) என்ற சங்கப்பாடல் புகழ்ந்தேத்தும் பிறர்க்கென முயல்வார் அனைவர் பற்றியும் இவ்வதிகாரம் பேசுகிறது. பொதுநலம் பேணிப் பொருள்செறிந்த வாழ்க்கை வாழ்பவர்களே நீத்தார் ஆவர்.

நீத்தார் பெருமை:

அறத்தைக் கடமையாக ஏற்று வாழ்க்கைப் பணியாகக் கொண்டு, அதற்காகத் தம்மையே அளித்து, தொண்டு செய்து, மாந்தர் வாழ்க்கையைச் செப்பமாக்கும் செம்மல்களான செயல்வீரர்களைப் பற்றியது. அப்பெரியரை வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், தன்னலம் துறந்தார், அறம் பூண்டார், ஐந்தையும் காப்பான், ஐந்து அவித்தான், செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை தெரிவான், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர், என்று அழைத்துச் சிறப்பிக்கிறார். இப்படிப் பல்திற வல்லமை கொண்டவர்களது ஆற்றலே சமுதாயச் சக்தியாக அமைந்து மாந்தரை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். எனவே அவர்கள் மிகவும் போற்றுதற்குரியவர்கள்.

அரசு அமைப்பையும் சமுதாயத்தையும் இயக்கும் ஆற்றல் கொண்ட உயர்ந்தோரது தன்னலமற்ற தொண்டு பற்றியதே 'நீத்தார் பெருமை'. இங்கு பேசப்படும் நீத்தார் என்பவர் எந்தத் துறையில் இருப்பவராயினும் அத்துறையில் கருத்தாகச் செயல்பட்டு, உலக நலத்துக்காக, தனது தனித் தேவைகளை/இன்பங்களைத் தியாகம் செய்து, வாழ்க்கை வசதிகளைத் துறந்து சாதனை புரிபவர்கள். ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தியவர்களாலே இது இயலும் என்பதை வள்ளுவர் அழுத்தமாகவே (மூன்று குறட்பாக்கள் ஒதுக்கி) சொல்வார். செயற்கரிய செய்யும் பெரியரும் இவர்களிலிருந்தே உருவாக முடியும்; அப்பெரியர் அரிய செயல்கள் புரிந்த அரசியல், சமூகத் தலைவராக, கல்வியாளராக, பொதுத்தொண்டு புரிவோராக, இருந்து சமுதாயத்திற்குப் பெருநன்மை நல்கியவராக இருப்பர். (காந்தி, காமராஜ், ஈ வே ரா, உ வே சாமிநாத ஐயர், ஆல்பர்ட் சுவைட்சர் போன்றோர் நினைவுக்கு வருவர்.) மற்றும் சிலர் காலத்தால் அழியாத இலக்கியம் படைத்தோராக (திருவள்ளுவர்), அல்லது அருளாளராக (அன்னை தெரசா) இருக்கலாம். இவர் போன்றோரை முழுமனிதராக அடையாளம் காட்டுகிறது இவ்வதிகாரத்துப் பாடல்கள்.

சமுதாய நலத்திற்காகப் பாடுபடும் அனைத்து நல்லவர்களும், கருணை மனம் கொண்டோரும், அறிவியல் அறிஞரும்-தம்நலம் துறந்து பொதுநலத்திற்காகப் பாடுபடுபவர் அனைவரும்- நீத்தார்க்கு உரிய வாழ்வும் பெருமையும் உடையவர்களே. இவர்கள் திருமணம் புரிந்துகொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்தார்களாயினும் இவர்களும் நீத்தாரே. புறவேடம் கொண்ட போலித் துறவிகளை வள்ளுவர் நீத்தாராகக் கருதமாட்டார்.

குறள் கூறும் நீத்தார் துய்த்தலைத் துறந்தவர்; மக்களுள் சிறந்தோர்; தன்னலம் கடிந்து பிறர் நலம் பேணும் பெற்றியாளர்; வாழ்க்கையின் சுமை தாங்கமாட்டாது கசப்புற்று உலகினைத் துறந்தவர் அல்லர்; வாழ்க்கையை வெறுத்தவர் அல்லர்; வாழ்வின்பம் துய்த்தோ துய்க்காமலோ, வாழ்வும் மனமும் முதிர்ச்சி பெற்று அறநெறி நிற்கும் தூயோர்; அவர்கள் அறத்தைப் பணியாக மேற்கொண்டதால் அறவோர் என அழைக்கப்பட்டனர். அறத்தை அறத்திற்காகவே செய்பவர்கள் அவர்கள் தீயநெறிகளை ஒதுக்கி, மன உறுதியுடன் ஐம்புலன்களையும் ஒடுக்கி, விழுப்பமுடைய வினைகளை ஒழுக்கம் வழுவாது ஓம்பி தொண்டாற்றி வருபவர்கள். அவர்கள் சமயம், மொழி, இனம், குலம், குடி என்ற வேறுபாடில்லாமல் அன்பு பாராட்டுபவர்கள். இறைவன் படைப்பில் தோன்றிய உயிர்கள் அனைத்தின்மீதும் அவர்கள் கருணை காட்டுவர். இங்கு இவர்கள் பெருமை குன்றின்மீது ஏற்றிக் காட்டப்பெறுகிறது.

நீத்தார் பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 21 ஆம்குறள் ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையே விருப்பமான விழுப்பம் என பனுவல் முடிவு கொள்ளும் எனச் சொல்கிறது.
  • 22 ஆம்குறள் நீத்தார் பெருமையை இறந்தாரை எண்ணி அறிந்து கொள்க என்கிறது.
  • 23 ஆம்குறள் இருவேறு நிலைகளை ஆராய்ந்து தந்நலத் துறவு என்ற உயர்ந்த அறத்தை மேற்கொண்டார் பெருமையால் இந்த உலகம் ஒளிர்கின்றது என்கிறது.
  • 24 ஆம்குறள் உளஉறுதியுடன் பொறிகளை அடக்கிய நீத்தார் மேலான இடம் செல்வர் என்கிறது.
  • 25 ஆம்குறள் தவமுயற்சியுடன் செயல்பட்டு இந்திரபதவி பெற்றவன் போல ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் நீத்தார் தனது குறிக்கோளை அடைவர் என்கிறது.
  • 26 ஆம்குறள் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் ஆகின்றனர் என்கிறது.
  • 27 ஆம்குறள் ஐம்புலன்களின் கூறுபாடுகளைத் தெரிந்த நீத்தார் இவ்வுலகத்தை இயக்குவர் என்கிறது.
  • 28 ஆம்குறள் நீத்தார் பெருமை அவர் அருளிச்சென்ற மொழியால் விளங்கும் என்கிறது.
  • 29 ஆம்குறள் குணத்தில் சிறந்த நீத்தார்க்கு ஒருகணம் கூட சினம் தோன்றுவதில்லை என்கிறது.
  • 30 ஆம்குறள் தந்நலம் நீத்த அருளாளரே அந்தணர் என்று அழைக்கப்படுவர்; அவர் எல்லா உயிர்கள் மேலும் கருணையுள்ளம் கொண்டவர் என்கிறது.

நீத்தார் பெருமை அதிகாரச் சிறப்பியல்புகள்

கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு இவற்றை அடுத்து பனுவலின் மூன்றாவது அதிகாரமாகச் சிறப்புச் செய்யப் பெற்றதிலிருந்து, 'நீத்தார் பெருமை' யின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். 'மணக்குடவர் கூற்றுப்படி பெரியவர்கள் நல்ல ஒழுக்கம் அல்லது அறத்திற்காக எல்லாவற்றையும் துறப்பர். திருக்குறள் முழுவதோடும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவரது உரை அதிகாரத்தின் இன்றியமையாமையைச் சுட்டுகின்றது' (தெ பொ மீ).

நீத்தார் அரிய செயல்கள் புரியவல்லவர்கள் என்பதைக் கூறும் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்ற பாடல் இங்குதான் உள்ளது.

பொறிபுலன்களைக் கட்டுப்படுத்துவதின் இன்றியமையாமை குறளில் பல இடங்களில் குறிக்கப்பெற்றுள்ளது. அறம்பூண்டார் பெருமையால் உலகம் விளக்கம் பெற்றது என்று சொல்லியவர் சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு என்ற பாடல் மூலம் ஐந்தையும் அடக்கியவர் உலகை ஆள்வர் என்கிறார்.

அந்தணர் யார் என்பதைத் தெளிவுபடுத்தி எல்லா உயிர்களிடத்தும் அருள் பொழிவோரைப் பெருமைப் படுத்தும் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் பாடல் இவ்வதிகாரத்திலே உள்ளது.
குறள் திறன்-0021 குறள் திறன்-0022 குறள் திறன்-0023 குறள் திறன்-0024 குறள் திறன்-0025
குறள் திறன்-0026 குறள் திறன்-0027 குறள் திறன்-0028 குறள் திறன்-0029 குறள் திறன்-0030